தரிசனமும் செயல்திறனும் கொண்ட ஒரு தலைவன்

ஒரு தலைவன், தெளிவான தரிசனமும், அதை செய்யும் ஆர்வமுமுடையவனாய், தன்னலமற்ற அந்த விருப்பத்தை அடைய கடினமாக உழைக்கும்போதும், அதற்காக தேவன்மேல் நம்பிக்கை உடையவனாயும் இருக்கும்போது ஒரு சிறந்த தலைவனாக வெளிப்படுகிறான்.

வேதத்தில் நெகேமியா அத்தகைய தலைவர்களில் ஒருவர். கிமு 445 இல், அவர் பாரசீகத்தில் மன்னரின் உடனடி ஊழியராகப் பணியாற்றியபோது, எருசலேம் நகரம் மற்றும் அதன் சுற்றுச்சுவரின் அழிவைப் பற்றி கேள்விப்பட்டு, ஒரு யூதராக இருந்த அவரது இதயம் நொந்துகொண்டது, மேலும் அவர் கவலையும் மிகுந்த துயரமும் அடைந்தார். இந்த பிரச்சனை அவரை அமைதியிழக்கச் செய்தது, அதைப் பற்றி ஏதாவது செய்ய அவரைத் தூண்டியது.

எனவே, அவருக்கு இருந்த அந்த துயரம் ஒரு நோக்கமாக மாறியது. மேலும் அவர் ஒரு தெளிவான தரிசனத்தை உருவாக்கினார், அதாவது “எருசலேமின் சுவர்களை புதுப்பித்து மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்” என்பதே அது.

அப்படி அந்த வேலையைச் செய்ய அவர் எருசலேமுக்கு வந்தபோது, எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் கொஞ்சம் அல்ல. பல இடையூறுகளும் பிரச்சனைகளும் இருந்தன. ஆனாலும் அவர் தரிசனத்தை நிறைவேற்ற எருசலேம் மக்களை ஒன்றிணைத்தார்.

சுவர் சுமார் 4 கிமீ நீளமும், 2.5 மீட்டர் தடிமனும், 12 மீ உயரமும் கொண்டது. பல எதிர்ப்புகளையும் மீறி பணியை தொடங்கி வெறும் 52 நாட்களில் திட்டத்தை நிறைவேற்றினார். 2024-ல் கூட நம்முடைய அனைத்து நவீன உபகரணங்கள் கொண்டு இதை 52 நாட்களில் முடிப்பது எளிதல்ல என்று நான் நினைக்கின்றேன். ஆனால் அவர் ஏறெடுத்த ஊக்கமான அந்த துவக்கம், தொடர்ந்த மனம் சோராத கடின உழைப்பு மற்றும் தேவன்மேல் வைத்த விசுவாசம் ஆகியவை இந்த வரலாற்று மிக்க வேலையை நிறைவேற்றி முடிக்க அவருக்கு உதவியது.

என் அன்பான நண்பர்களே, நமக்குள் தேவன் கொடுக்கும் ஆசைகளும், ஏக்கங்களும் தரிசனமாக மாற்றப்பட வேண்டும், பின்பு அதை நிறைவேற்ற துவங்குதலும், கடின உழைப்பும், தேவன் மேல் ஒரு விசுவாசத்துடன் நம்பிக்கையுடன் சோராது தொடர்ந்து கொடுக்கும் முயற்சியும் நம்மை சாதிக்கிறவர்களாக மாற்றிடும். எனவே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்ற தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...