உடலின் எந்தப் பகுதியில் நம் உயிர் உள்ளது?
ஒரு மனிதனின் உயிர் உடலின் எந்தப் பகுதியில் உள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு மனிதனின் உயிர் இருதயத்திற்குள் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள், சிலர் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள நடுப்பகுதியில் இருப்பதாக கூறுகிறார்கள், சிலர் அதை கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.
சரி, அதைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?
லேவியராகமம் 17:11 & 14, ” மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது… சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்… சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே…என்று கூறுகிறது.
மனிதர்களின் உயிர் அவர்களின் இரத்தத்தில் உள்ளது. ஒரு நபர் தனது முழு இரத்தத்தையும் இழக்கும்போது அவர் மரிக்கிறார், ஒரு நபர் மரிக்கும் போது அவரது இரத்தம் உறைந்து போகிறது, அல்லவா? இரத்தம் நம் உடலின் அனைத்து பகுதிகளிலும் பாய்கிறது, அதாவது நம் உடலின் அனைத்து பகுதிகளிலும் நம்முடைய உயிர் பாய்ந்து செல்லுகிறது.
ரோமர் 6:23 ல் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும், எபிரெயர் 9:22 ல் இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்றும் கூறுகிறது.
அதனால்தான், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து சிலுவையில் தம்முடைய இரத்தம் முழுவதையும் நம்முடைய பாவங்களுக்காகச் செலுத்தி, நமக்கு பாவ மன்னிப்பைக் சம்பாதித்துக் கொடுத்தார்.
என் அன்பான நண்பர்களே, கர்த்தர் எல்லாவற்றையும் சுத்தமாக்கிக் கொடுத்தாலும் புதிய ஏற்பாட்டிலும் நாம் இரத்தம் சாப்பிடுவது என்பது விலக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் 21:25, ” விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும் … விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே…” என்று கூறுகிறது.
ஆதலால் இப்போதும் கூட, நாம் விலங்குகளின் இரத்தத்தை சமைத்து உண்பதை தேவன் அங்கிகரிப்பதில்லை, அது பாவாமாகும். சிலருக்கு அது பிடித்த உணவாக இருக்கலாம், ஆனால் மன்னிக்கவும், வேதத்தின்படி அதற்கு உங்களை விலக்கிக் காத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!