எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதவன் வாழ்ந்தால் என்ன?

ஓரு ஊரில் ஒரு சிறுவன் தான் தினமும் விளையாட செல்லும் இடத்தில் ஆரஞ்சு போன்ற பழங்கள் கொண்ட ஒரு அழகான மரத்தைக் கண்டு அதை ஒரு நாள் பறித்துப் புசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டானாம்.

அப்படி ஒரு நாள் அதை புசிக்கலாம் என்று சென்ற போது, அங்கிருந்த ஒரு கிராமத்து மனிதரிடம், இது என்ன மரம், இந்தக் கனியை நான் புசிக்கலாமா? என்று கேட்டதற்கு, அந்த மனிதர், எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதவன் வாழ்ந்தால் என்ன? என்று சொல்லி, இது எட்டி என்ற கசப்பான விஷம் நிறைந்த ஒரு கனி, இதை நீ புசிக்கலாகாது என்றாராம்.

நாமும்கூட கிறிஸ்துவ வாழ்க்கை வாழ்ந்தாலும், பல நேரங்களில் மற்றவர்கள் நம் அருகில் உதவிக்காக வரும்போது எட்டியைப் போல கசப்பான கனியைத் தருகிறவர்களாக இருப்பதுண்டு. கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதில்லை, அல்லவா?

ஏசாயா 5:4 “நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?” என்று எழுதப்பட்டுள்ளது.

ஆம் என் அன்பு நண்பர்களே, சிலர் ஆத்தும அறுவடை என்னும் நற்கனியைத் தருவார்கள் என்று எண்ணி தேவன் அவர்களை தமது ஆவியின் வரங்களால் நிரப்புகிறார், அவர்களோ சோம்பல், சுயகாரியம் என்ற கசப்பான கனிகளையேத் தருகிறார்கள்.

சிலர் தன் ஊழியத்திற்கும், ஊழியர்களுக்கும், ஏழைகளுக்கும் பெரும் உதவியாயிருப்பார்கள் என்று தேவன் அவர்களுக்கு செல்வத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார், அவர்களோ மனதார கொடுக்கமாட்டாத கஞ்சத்தனம் கொண்ட கசப்பானக் கனியையேத் தருகிறார்கள்.

இன்னும் இன்னும் எத்தனை எத்தனைக் கசப்பான கனிகள்!!!

தேவன் நமக்குத் தேவையான நன்மைகளை செய்து, நம்மில் உள்ள கற்களைப் பொருக்கி, நம்மை திராட்சத்தோட்டமாக நாட்டி, கோபுரத்தையும் கட்டி, நம்மில் நல்ல கனிகளை எதிர்பார்த்திருக்க நாம் எந்த வகையில் அவருக்குக் கசப்பான கனிகளைக் கொடிக்கின்றோம் என்பதை ஆராய்ந்து நற்கனிகளைக் கொடுத்திடுவோம்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...