ராட்சதர்களை மிகைப்படுத்துதல்
கானான் தேசத்தை வேவுப்பார்க்கச் சென்ற இஸ்ரவேலின் பன்னிரண்டு வேவுகாரர்களும் தேசத்தைப் பற்றிய நல்ல அறிக்கையுடன் திரும்பி வந்தனர், ஆனால் அங்கு உள்ள மக்களைப் பற்றியோ பத்து வேவுகாரர்கள் தவறான கண்ணோட்டத்தைப் பரப்பி சபையை கலங்கப்பண்ணினர். ஏனாக்கின் புத்திரரான ராட்சதர்கள் இருந்ததை அவர்கள் எல்லா இஸ்ரவேலர்களுக்கும் எடுத்துரைத்தனர். மேலும் இந்த வேவுகாரர் தங்கள் பார்வையிலும், அவர்கள் பார்வையிலும் வெட்டுக்கிளிகளைப் போல் இருந்ததாக கூறினர்.
இந்த அறிக்கையைக் கேட்கும் யாவருக்கும் கானானியர்கள் அனைவருமே ராட்சதர்கள் என்றுதான் கற்பனை செய்வார்கள், அல்லவா? ஆனால் உண்மையில், அந்த உளவாளிகள் ஒரு சில ராட்சதர்களை மட்டுமே பார்த்திருந்தனர், சொல்லப்போனால் அங்கே மூன்று இராட்சத மனிதர்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் செய்த மிகைப்படுத்தல் மிகவும் அதிகமாக இருந்தது, அது ஜனங்களை சோர்வடையச் செய்தது.
எண்ணாகமம் 13:22 கூறுகிறது, “ தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள்…”
என் அன்பான நண்பர்களே, கானான் தேசத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ராட்சதர்கள் வாழ்ந்திருக்கலாம், ஆனால் கானானில் எல்லாரும் இராட்சதர் அல்ல. இஸ்ரவேலர்கள் தாங்கள் 603,500 வீரர்கள் என்றும் தங்களோடு கர்த்தர் இருக்கிறார் என்பதையும் மறந்து போனார்கள். மாறாக எதிரிகளின் சக்தியை மிகைப்படுத்திப் பேசி, அழகான ஆசீர்வதிக்கப்பட்ட தேசத்தை சுதந்தரிக்கத் தவறி, வனாந்தரத்தில் மரித்துப் போயினர்.
வாழ்க்கையில் பல சமயங்களில் நாமும்கூட நமது எதிரிகள் மற்றும் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை மிகைப்படுத்தி மதிப்பிடுகிறோம், அதன் விளைவாக தேவன் நமக்காக வைத்திருந்த ஆசீர்வாதத்தை நாம் பெறத் தவறிவிடுகிறோம். என் அன்பான நண்பர்களே அவருடைய வல்லமை வாய்ந்த கரத்தை நினைவுகூர்ந்து, அவருடைய எல்லா நன்மைகளையும், அவர் உங்களுக்காகச் செய்த முந்தைய அற்புதங்களையும் தியானியுங்கள். அதன்மூலம் எப்பேற்பட்ட ராட்சதர்களையும் எதிர்கொள்ளவும், அவர்களை துரத்திவிடவும் தயாராகுங்கள்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!