ஆட்சியாளர்களை மாற்றுவதற்கான நேரம்
உலகம் முழுவதும் நாம் பார்த்தால், பல நாடுகள் நல்லாட்சி மற்றும் உண்மையான தலைவர்கள் இல்லாமல் தவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் நாம் அதைக் காண முடிகின்றது.
இந்தியாவின் பொதுவான குடிமகனாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற நிலையிலிருந்து, ஒற்றைக் கட்சி ஆதிக்கம் மற்றும் மத அடிப்படையிலான ஆட்சி என்ற நிலைக்கு நகர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நம் மக்களுக்கும், சுவிஷேசத்திற்கும், நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது அல்ல. பல துன்மார்க்கமான காரியங்கள் நடப்பதையும், அவைகள் மறைக்கப்படுவதையும் நாம் இதுவரை பார்த்ததுண்டு.
நீதிமொழிகள் 29:2, “நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.” என்று கூறுகிறது.
என் அன்பான நண்பர்களே, தேவ பிள்ளைகளாகிய நாம் ஒரு நாட்டின் குடிமக்கள் மட்டுமல்ல, நாம் பரலோகத்தின் பிரதிநிதிகள், ஆட்சியாளர்களை மாற்றும் சக்தி நம்மிடம் உள்ளது. நான் இங்கே ஓட்டுப் போடுவதைப் பற்றியோ அல்லது குரல் கொடுப்பதைப் பற்றியோ பேசவில்லை, ஆனால் நமது ஜெபத்தின் வல்லமையைக் குறித்துப் பேசுகிறேன்.
சுவிஷேசத்தைத் தடுக்கும் திட்டங்கள், நாட்டைக் கெடுக்கும் திட்டங்கள் ஆகியவற்றை செய்கிற கட்சிகள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவர நம் ஜெபங்களில் நிற்க வேண்டிய நேரம் இது. 2024ல் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், அப்படிப்பட்ட மனிதர்களுக்கு படுதோல்வி என்ற நியாயத் தீர்ப்பை நம் ஜெபங்களில் நாம் கூற வேண்டும். மேலும் நடுநிலைப்பாடு கொண்ட கட்சிகள், நல்ல தலைவர்கள் மற்றும் தேவபிள்ளைகளுக்கு கர்த்தர் ஜெயிப்பதற்கான ஞானத்தையும், யுக்திகளையும், வெற்றிகளையும் தரவேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். தேவ பிள்ளைகளாய் அப்படியே தினமும் ஜெபித்திடுவோம்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!