தடையல்ல குடை

ஒரு மரத்தினுடைய வேரைக் குறித்து ஒரு கதை உண்டு. ஒரு ஊரிலிருந்த ஒரு மரத்திற்கு மிகுந்த இலைகளும் கிளைகளும் உண்டாம். எப்பொழுதெல்லாம் மழை பெய்ததோ, மழை நீர் அந்த வேருக்கு நேராக கிடைக்காமல் இந்த இலைகளால் தடுக்கப்பட்டதால் அவைகள் மரத்திற்கு அப்பால் விழுந்ததாம்.

இதனால் அந்த வேர் மிகவும் கோபமாக ஒவ்வொருமுறையும் முறுமுறுத்துக் கொண்டிருந்ததாம். ஒரு நாள் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த வேர் கிளைகளுக்கு மேலாக மரத்தின் உச்சிக்கு சென்று அமர்ந்து கொண்டதாம், அப்படி செல்லும்போது இலைகளைப் பார்த்து அந்த வேர், ‘எனக்கு வரும் நன்மைகளை இத்தனை நாட்கள் நீ தடுத்தாயே, நான் இப்பொழுது உனக்கு மேலாக ஏறிவிட்டேன்’ என்று சொல்லியதாம்.

ஆனால் இது வரை பூமிக்கடியில் இருந்த அந்த வேர் சிறிது நேரத்தில் தான் அனுபவித்திராத ஒரு உணர்வை உணர்ந்ததாம், அதாவது வெயிலினால் ஏற்பட்ட உஷ்ணத்தை அனுபவித்ததாம். அதை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதன் பின் அந்த வேர் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து இந்த இலைகள் தனக்கு தடை இல்லை அவைகள் குடை என்பதை அறிந்து கொண்டு மரத்திற்கு அடியில் சென்றதாம்.

நம் வாழ்விலும் சில நேரங்களில் சில துன்பங்களின் வழியாக, முன்னேற முடியாத தடைகள் வழியாக கடந்து செல்கிறோம், அதைக் குறித்து நமக்கு மிகுந்த மனஸ்தாபங்கள் உண்டு, அல்லவா?

யாக்கோபு 1:12 ல் வேதம் சொல்லுகிறது, “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” என்று கூறுகிறது.

என் அன்பு நண்பர்களே, கர்த்தர் ஒரு போதும் நம்மை அழிப்பதற்காக சோதனைகளை அனுமதிப்பதில்லை, மாறாக நம்மை ஊன்றக் கட்டுகிறதற்காக அனுமதிக்கின்றார். அதற்காக நீங்கள் அதிலே அமிழ்ந்து விட வேண்டுமென்று அர்த்தமல்ல, ஒன்றை நினைவு கூறுங்கள், நமக்கு வரும் சோதனைகள் அதிசீக்கிரத்தில் நீங்கும் லேசான உபத்திரவங்களாகும், நாம் அவைகளை ஜெயிக்கும்போது, மேற்கொள்ளும்போது சகிக்கும்போது அவைகள் மிகவும் அதிக நித்திய கனமகிமையைக் கொண்டுவரும்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...