நிதானமாய்ப் பேசுதல்
சில நேரங்களில் நாம் அனைவரும் அவசரப்பட்டு நிதானமற்றுப் பேசிவிடுகிறோம், ஆனால், அவசரப்படாமல் பொறுமையாக பதில் சொல்பவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. அவர்கள் பேசுவதற்கு முன் சிந்தித்துப் பேசுபவர்கள்; அவர்களிடம் கேள்விக் கேட்டால் அதை ஆராய்ந்து அவர்களின் பதில் என்ன விளைவுகளை உருவாக்கும் என்று அறிந்து பின்னர் அவர்கள் பேசுகிறார்கள், அதற்காக அவர்கள் பதிலளிக்க ஒரு மணிநேரம் எடுப்பதில்லை, ஆனால் அவர்கள் சில வினாடிகள் எடுத்துக் கொள்கிறார்கள். மிகுந்த குழப்பங்களின் மத்தியிலும் அவர்களின் முகங்களில் அமைதியைக் காண முடியும். அது ஒருஅழகான நற்குணம், அல்லவா?!
நீதிமொழிகள் 16:13, “… நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.” என்று கூறுகிறது.
முதன்முறையாக யோசேப்பு பார்வோன் ராஜாவிற்கு முன்பாக நிறுத்தப்பட்டபோது, அவன் ராஜாவின் கனவை விளக்குவதற்கு அவசரப்படவில்லை, பதற்றமடையவில்லை, மாறாக நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும்ப் பேசி கனவையும் விளக்கினான், அதினால் பார்வோன் அவன்மேல் பிரியமடைந்தான் . ஆகவே அவன் யோசேப்பைப் பார்த்து”… தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ… உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.” என்று எல்லாருக்கும் முன்பாகக் கூறினான்.(ஆதி. 41:38,39)
என் அன்பான நண்பர்களே, நிதானமாய்ப் பேசுவது என்பது ஞானமாகும், அவசரமாகப் பேசாமல், பொறுமையாகப் பேசும் இந்த ஞானத்தை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தர வேண்டும் என்று ஜெபிக்கின்றேன். ஏனெனில் நிதானமானப் பேச்சு ராஜாக்களிடமிருந்து கதவுகளைத் திறக்கும்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!